Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

அயோத்தி - ஒரு மனிதாபிமானம்

 



ஒரு திரைப்படத்தின் ஒரு சிறிய காட்சியில் கதாநாயகனை பார்த்து ”பாய் நாம் க்யா ஆப்கா? (தம்பி உங்கள் பெயர் என்ன)” என்ற கேள்விக்கு ”அப்துல் மாலிக்” என்ற பதில் வரும் போது நம்முடைய ஒட்டு மொத்த இஸ்லாமியச் சமூகமும் தலைநிமிர்ந்து நிற்கிற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை என்பதே உண்மை. 


கிட்டத்தட்ட 1992ம் ஆண்டிற்கு பின்பிருந்தே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவது அல்லது அவர்களை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லாதவர்களாக காட்டுவது என்பதே திரைப்படங்களின் நோக்கமாக இருந்து வருகிறது., அதிலும் தீவிரவாதியாக காட்டுவதே அதிகம் 1990களுக்கு முந்திய படங்கள் அவ்வாறில்லை பெரும்பான்மையாக படங்களில் ஒரு இஸ்லாமியர் இருப்பார் அவர் நேர்மையான நியாயமான அநியாயத்திற்கு எதிர்த்து நின்றுபோராடும் முதல் ஆளாக முக்கிய ஆளாக இருப்பார் அனாதைகளை ஆதரிப்பவராக ஏழைகளுக்கு உதவுபவராக இருப்பார்.


ஆனால் 1990, 92 க்கு பிறகு, சரியாக சொல்வதானால்  ”ரோஜா”  திரைப்படத்திற்கு பிறகு அந்த பார்வை வேறு மாதிரி ஆனது. அதன் பின்பு வந்த ”பம்பாய்” திரைப்படத்திற்கு அப்புறம் முஸ்லிம்களை குண்டு வைப்பவர்களாக, தீவிரவாதியாக, இந்துக்களுக்கு எதிரியாக, பாகிஸ்தான் ஆதரவாளராக, அந்த நாட்டிலிருந்து இந்தியா வந்து அப்பாவி மக்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொல்பவர்களாக காட்டுவார்கள் இன்னும் காட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். 


இருக்கும் ஊடகங்களிலேயே மிகவும் வலிமையான ஊடகம் திரைப்படம் என்பதை உணராமல் திரைப்படங்கள் காணக் கூடாது திரைப்படங்கள் ஹராம்(விலக்கப்பட்டவை) என்று திரைப்படங்களையும் அதனைச்சார்ந்த ஒட்டு மொத்த துறைகளையும் ஒதுக்கி வைத்ததன் விளைவு, திரைப்படத் தொழிற்நுட்பம் தெரியாமல் அதைச் செய்ய இயலாமல் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதற்கு பதில் சொல்ல தெரியாமல் (முடியாமல்) இஸ்லாமிய சமூகம் வேதனையுடன் அதைக் கடந்த சென்று கொண்டுதான் இருக்கிறது, 


சூழல் இவ்வாறு இருக்க எனக்கு தெரிந்து சமீபத்தில் கதாநாயகனை நல்ல இஸ்லாமியனாக சித்தரித்து வெளிவந்த ஒரு படம் ”வெங்கட் பிரபு” வின் இயக்கத்தில் வெளிவந்த ”மாநாடு” திரைப்படம் தான்., அதில் இஸ்லாமிய இளைஞனை (சிலம்பரசனை) ஒரு வழக்கில் இஸ்லாமியன் என்பதால் எவ்வாறு சிக்க வைக்க முற்படுகிறார்கள் என்பதே கதை. அதன் பிறகு சமீபத்தில் ”சசிகுமார்” நடித்து, அறிமுக இயக்குனர் ”மந்திர மூர்த்தி” இயக்கத்தில் வெளிவந்த ”அயோத்தி” எனும் திரைப்படம்தான்.


படத்தில் உத்திரபிரதேசத்தில் இருக்கும் அயோத்தியிலிருந்து மிகவும் கோபக்காரரான, அதி தீவிர இந்து கொள்கைகளை கடைபிடிக்கும் இந்துத்துவ வாதியான,  பல்ராம் என்பவர் அவருடைய மனைவி (ஜான்கி), மகள் (ஷிவானி), மகன் (சோனு) உடன் தமிழ்நாட்டிலிருக்கும் ”இராமேஸ்வரம்” செல்வதற்காக தீபாவளியன்று மதுரையில் வந்து இறங்குகிறார்., மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்ல ஒரு டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பல்ராம் மற்றும் டாக்ஸி ஓட்டுனர் கனகு (சசிகுமாரின் நண்பர்) இடையே ஏற்படும் மோதலால் எதிர்பாராத விதமாக டாக்ஸி விபத்துக்குள்ளாகிறது.


இந்த விபத்தில் அதில் பயணித்த பல்ராம், அவருடைய மகள், மகன் மற்றும் ஓட்டுனர்க்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு தப்பிவிட பல்ராமின் மனைவி ஜான்கிக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது., இதனால் மருத்துவமனையில் சிகிட்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மேல் சிகிட்சைக்காக உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்க.., அங்கே சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் நண்பன்(ஓட்டுனர் கனகை) பார்க்க வந்த சசிகுமாரிடம் விபத்தில் காயமடைந்த தன் தாயை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய உதவி கேட்கிறார் பல்ராமின் மகள் ஷிவானி., மொழியும் புரியாமல் யாருடைய உதவியும் இல்லாமல் முன்கோபக்கார தந்தையுடனும் ஒன்றும் அறியாத தம்பியுடனும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள ஷிவானி க்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். 


தீபாவளி தினம் என்பதால் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஓட்டுனர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை தானே இயக்கிக்கொண்டு துணைக்கு தன் நண்பன் பாண்டி(புகழ்) யுடனும், மருத்துவமனை செவிலியருடனும், பல்ராம் மனைவி ஜான்கி யை மேல் சிகிட்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக ஜான்கி இறந்து விட, இந்துத்துவ நம்பிக்கைகளில் தீவிரமாக ஊறிய பல்ராம் இறந்த தன் மனைவியை மருத்துவமனை எடுத்துச் சென்றால் போஸ்ட்மார்டம் செய்யப்படுவார் அது இந்து நமபிக்கைக்ககு எதிரானது அதனால் மனைவியை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என உறுதியாக இருக்க, இதற்கு கடும் எதிர்பு தெரிவித்த செவிலியர் வழியியேலே இறங்கிவிட, பெரும் யோசனைக்கு பிறகு ஆம்புலன்ஸை விமான நிலையத்திற்கு விடுகிறார் சசிகுமார்.


அங்கே சென்று விசாரிக்க இன்று மாலைக்குள் உடலை அனுப்பவேண்டும் இல்லையேல் வரும் 4நாட்கள் விமானம் இல்லை எனவும், உடலை அனுப்ப பிண பரிசோதனை அறிக்கை மற்றும் பதப்படுத்தப்பட்டது (எம்பார்மிங் செய்யப்பட்டது) எனும் அறிக்கையுடன் போலிஸ் என்.ஓ.சி உட்பட 7 சான்றிதழ்களுடன் வரவேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் கூறி அதற்கான தொகை 1லட்சம் வரை ஆகும் எனவும் கூறிடும் அதே வேளையில். காவலர்கள் இடையில் இறங்கிய செவிலியரின் தகவலின் பேரில் போஸ்ட்மார்டம் செய்ய மருத்துவமனையில் உடலை ஒப்படைக்காமல் விமானத்தில் அனுப்ப முற்படுகிறார்கள் என விமான நிலையத்திற்கே வந்து அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் கூட்டிச் செல்கின்றனர்.


பின்பு போஸ்ட்மார்டம் முடிந்த ஜானகியின் உடலை எவ்வளவு சிரமப்பட்டு அனைத்து ஆவணங்களையும் ஏற்பாடு செய்து, உடலை பதப்படுத்தி தன்னுடைய மற்றும் தன் நண்பர்களின் பண உதவியுடன் அனைவரையும் விமானத்தில் அவர்கள் சொந்த ஊரான அயோத்திக்கு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.


அனைத்து விவகாரங்களும் முடிந்த நிலையில் விமான நிலையத்தில் விமானம் ஏறும் முன்புதான் பல்ராம் முன்பின் தெரியாத தனக்கு தன் குடும்பத்திற்கு சரியான நேரத்தில் இவ்வளவு உதவிகள், அதுவும் முன்கோபத்தாலும் தான் கொண்ட நம்பிக்கைகளாலும் யாரையும் மதிக்காமல் நடந்து பல பிரச்சனைகளை உண்டாக்கிய தனக்கு பொருமையுடன் அனைத்து உதவிகளையும் செய்து தன்னுடைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமாரை பார்த்து கேட்கிறார்.,  ”பாய் நாம் க்யா ஆப்கா? (தம்பி உங்கள் பெயர் என்ன)” என்ற கேள்விக்கு ”அப்துல் மாலிக்” என்று பதில் கூறும் போது பல்ராம் தன் மனதிற்குள் இஸ்லாமியரை பற்றி கட்டமைத்து வைத்த அனைத்து மாய பிம்பங்களும் உடைந்து தவிடு பொடியாகிறது.


இந்த இடத்தில்தான் இஸ்லாமிய சமூகம் இப்படத்தின் இயக்குனர் ”மந்திர மூர்த்தி” அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம், ஒரு இஸ்லாமியர் செய்ய முன்வராத செயலை இச் சமூகத்திற்காக இயக்குனர் செய்திருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்துள்ளதாக தொடக்கத்திலேயே எழுதி காண்பிக்கப்படுகிறது, இக்கதைக்கு காரணமான உண்மையான அப்துல் மாலிக் யாரென பார்த்தால், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை க்கு அருகில் உள்ள அதிராம்பட்டினம் எனும் ஊரைச் சேர்ந்த சகோதரர் காலித் அகமது. 



இவர் ”உறவுகள் டிரஸ்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, அடையாளம் தெரியாத இறந்த உடல்கள், ஆதரவற்றோர் உடல்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து மரணித்தவர்களின் உடல்கள் என தினமும் பல உடல்களை அடக்கம் செய்துக் கொண்டிருக்கிறார்., இதுவரை சுமார் 7000 க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்திருக்கிறார். தற்போது ”உறவுகள் டிரஸ்ட்” ல் 500க்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் அதில் 250க்கும் அதிகமான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த சகோதரரின் சேவையயை மையமாக வைத்துதான் ”அயோத்தி” படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குன் ”மந்திர மூர்த்தி”, இந்த நேரத்தில் நாம் இயக்குனருக்கும், நடிகர் சசிகுமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிப்போம். நாமும் திரைத்துறையில் பங்கேற்று நம்முடைய வாழ்க்கை முறையை, பழக்கவழக்கங்களை, எதிர்ப்பை, நம்முடைய நியாயங்களை, கருத்தியல்களை தெரிவிக்கும் விதமாக படைப்புகளைத் தந்து நமது கருத்துரிமையை தக்கவைத்துக் கொள்வோம்., நன்றி

கருத்துகள் இல்லை