Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

ஏன் கசக்கிறது..?




திருமணம் 
       
எனது நண்பருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருந்தது, அவரை தற்போது சந்தித்தேன் அவர் முதலில் துபாயில்தான் இருந்தார் திருமணத்திற்காக இந்தியா சென்று திருமணம் முடித்து கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் துபாய் வந்தவரை நான் சந்தித்தேன், பரஸ்பரம் நல விசாரணை முடிந்த பின் ”என்ன பொண்டாட்டி தொறத்தி வுட்டுடிச்சா?” எனக்கேட்டேன், அதற்கு நண்பர் ”இல்லப்பா பொண்டாட்டி தொறத்தல நானாதான் விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்”. என்றார் வருத்தத்துடன்.

எனக்கு ஏன்தான் கேட்டோமோ என ஆகிவிட்டது., பிறகு காரணங்களை கேட்டவுடன் என்ன நேர்ந்தது அவர் வாழ்வில் ஏன் இப்படி சீக்கிரம் விரக்தியாகி விட்டார் எனத்தெரிந்து கொண்டேன்.

சரி அதையும் அதனுடன் சேர்த்து நமது கருத்துகளையும் கொண்டு ஒரு பதிவாகப் போடலாமே என் என்னியதன் விளைவு தாங்கள் தற்போது படித்துக் கொண்டு இருப்பது...

விரக்தி
       சிலருக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே விரக்தி, சிலருக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆனாலும் எலியும், புலியும்தான்.. உலகில் நிறைய பேர் வாழ்க்கையை வாழத்தெரியாமல்தான் ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

சாதாரணமாக பேசும் போது கூட திருமணம் என்றதும் ”குழி வெட்டியாச்சு” என கிண்டல் செய்கிற அளவில்தான் இருக்கிறது..

ஏன்? திருமண வாழ்வில் இணையும் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா? நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும் நபர்கள் இல்லையா? ஏன்? அதற்கு என்ன செய்யலாம் என சற்று பார்ப்போம்..

திருமணம் என்றவுடனையே ஒரு ஆண் பொதுவாக என்ன நினைக்கிறான், அப்பாட நமக்கு ஒத்தாசைக்கு நமது வேலைகளையெல்லாம் பங்கு போட ஒரு ஆள் கிடைத்தாகிவிட்டது என்ற நினைப்புதான் முதலில்., பிறகுதான் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற நினைப்பு வருகிறது.

பெண்னும் சளைத்தவளில்லை சிக்கிட்டான்டா ஒரு அடிமை என்கிற போக்குத்தான், ஆக ஒருவருக்கொருவர் தனக்கு சாதகமாக வருகிற துணையை தன்னுடைய அடிமையாக எப்படி அமைத்துக்கொள்வது, முழுக்க முழுக்க தன்னுடைய சுய நலத்திற்காக தன்னுடைய கணவனையோ அல்லது மனைவியையோ எப்படி மாற்றிக்கொள்வது என்கின்ற திட்டத்தில்தான் இருக்கின்றனர்., இதில் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் திட்டம் வேறு, சில இடங்களில் சேர்ந்திருக்கும். திருமணத்தின் மூலம் கிடைக்கும் துணையை தனது வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆழமான நட்பாக பார்ப்பவர்கள் மிக. மிகக் குறைவு.

திருமண வாழ்க்கையைப் பற்றிய நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனம் வருபவர்கள் ஏன் அடிப்படை சற்தோஷங்கள் கூட அடிபட்டு போனவர்களாக மாறுகிறார்கள்..? இதற்கான விடை தன்னிடம்தான் இருக்கிறத என தேட மறந்தவாகளாக அல்லது தேடத் தெரியாதவர்களாகத்தான் திருமண வாழ்க்கையைப் பற்றி எதிர்மறையாக புலம்புபவர்களில் பெரும்பாலோனோர் இருக்கிறார்கள்.

நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம், நான் அவளு(ரு)க்கு என்ன கொறை வச்சேன், அவருக்கு அதபண்ணினேன், இத பண்ணினேன். இருந்தும் என் வாழ்க்கையில சந்தோஷமில்லை என்ற புலம்பல். என்ன காரணம், ஏன் இந்த நிலை சற்று நிதானமாக, நடு நிலையாக, அமைதியாக யோசிக்க வேண்டிய விசயம்தான் இது..

தூண்டி விடுதல்...     
        திருமணமான பெண்ணிடம் திருமணமான முதல் நாளே உறவினர்கள் சிலர் சொல்வதுண்டு ”நன்றாக கணவனை முடிந்து வைத்துக்கொள், ஃபிரியா விட்டுடாதே, அது செய்ய விடாதே, இது செய்ய விடாதே, ஆம்பளைங்க அப்படி, இப்படி என இல்லாதது பொல்லாத்து அனைத்தையும் சொல்லி மனதை கலைத்துவிடுவார்கள், இந்த சேவை செய்றதுக்கே உடம்புல உயிர் தாங்கி நிறைய பேர் சுற்றி வருகிறார்கள், ஆண் நண்பர்களும் சிலர் அப்படித்தான், (ஆனால் பெண்களின் சதவீதம்தான் உயர்வு) 

இவர்களுக்கு முக்கியமான விஷ(ய)ம் என்னவென்றால் மற்றவர்கள் யாரும் சந்தோஷமா இருக்கக்கூடாது., அப்படி சபதம் எடுத்துக் கொண்டுதான் இந்த உலகில் வாழ்கிறார்கள். (ஒரு பெண்ணிற்கு அவரின் அம்மாவே அந்த மாதிரியான வேலையைச் செய்தார். என்னவென்று சொல்வது)

திருமணம் ஆன அன்றோ, அல்லது அதற்கு முன்போ, பின்போ இப்படி சொன்னால் தம்பதிகளின் மன நிலைமை எவ்வளவு மோசமானதாக மாறும்,.. அப்படி மாறுவதுதான் இந்த மாதிரியான கயவர்களின் வெற்றி.

இந்த மாதிரியான நண்பர், சொந்த பந்தம் என்ற போர்வையில் திரியும் குள்ளநரிக்கும்பலை அடையாளம் கண்டு அவர்களை விட்டும் நாம் தள்ளி இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான். அதுவும் எந்த ஒரு விசயமானாலும் அதை தன்னுடைய சுய புத்தியால் ஆராய்வது தான் நலம்பயக்கும் மாறாக சொல் புத்தி என்பது துன்பத்திற்கான தூண்டு கோளாகத்தான் அமையும்.

எதிர்பார்த்தல்...
        பொதுவாக கணவன் மனைவியிடம் திருமணம் முடித்து வந்தவுடன் சிலவிசயங்களை எதிர் பார்க்கிறான். மனைவியானவள் தனக்கு கால் அமுக்க வேண்டும், கை அமுக்க வேண்டும், துணி துவைக்கனும், அது பண்ணனும், இது பண்ணனும் என அவனுடைய எதிர்பார்ப்பின் வரிசை மிக நீளமாக இருக்கிறது,

மனைவியும் தன்னுடைய கணவன் தனக்கு நகை வாங்கித்தரனும், அதுவாங்கித்தர வேண்டும், இது வாங்கித்தரனும், அங்கே கூட்டிட்டு போகனும், இங்கே கூட்டிட்டு போகனும், பெருக்கனும், சமைக்கனும், என தனக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என ஒரு நீண்ட பட்டியல் வைத்திருக்கிறாள், (இதுல மாமியாருங்க வேற வீட்டுக்கு புதியதாய் ஏதே வேலைக்காரி வந்துவிட்டது போல மருமகளை வேலை வாங்கனும்னு நெனைக்கிறது (அதவிட்டுவோம் அத இன்னொரு பாதிவா பார்க்கலாம்). ஆக இவர்களின் பட்டியலில் உள்ள எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது, அவர்களின் மனம் கடினமாக மாறுகிறது. ஏமாற்றம் என்பது துன்பத்தின் அசைக்க முடியாத காரணம்.

கணவனோ, மனைவியோ., தயவு செய்து தனக்கு கணவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மனைவியோ, மனைவி தனக்கு என்னவொல்லாம் செய்ய வேண்டும் என கணவனோ, எதிர்ப்பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். மாறாக நான் அவளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், நான் அவருக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வகைப்படுத்திப் பாருங்கள்,, உங்கள் வாழ்க்கையில் கசப்பிற்கு இடமே இல்லை

விட்டுக் கொடுத்தல்...
        இது கணவன், மனைவிக்குமிடையே கருத்து மோதல்கள் வரும் போது, கருத்துக்களின் வலிமை ஏற்ற இறக்கமாகும் போது ஒருவருக்கு ஒருவர் கண்டிப்பாக விட்டுக் கொடுக்க வேண்டும். நன்றாக கவனியுங்கள் விட்டுக் கொடுத்தல் என்பது ஒருவர் பக்கமே இருத்தல் சரியல்ல கணவனும் விட்டுக்கொடுக்க வேண்டும், மனைவியும் விட்டுக் கொடுக்க வேண்டும், 

கணவன் மட்டுடே விட்டுக் கொடுத்தலோ அல்லது மனைவி மட்டுமே விட்டுக் கொடுத்தலோ வாழ்வின் இனிமையை சீக்கிரம் சீர்குழைத்துவிடும் என்பது நிதர்சனம். விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஒரு திருப்தியிருக்கிறதே நிச்சயமாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.

புரிந்துக் கொள்ளுதல்...
        மனைவியோ, கணவனோ தாம் துணையை பரஸ்பரம் புரிந்து கொண்டு நடத்தல் அவசியம். தன் கணவரின் போக்கு இப்படித்தான் அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, இதை அவர் கண்டிப்பாக ரசிப்பார், இது அவருக்கு கோபத்தை வரவழைக்கும் என்று குறிப்பறிந்து புரிந்துகொண்டு நடத்தல் நலம், கணவனும் தன்னுடைய மனைவி இதைச்செய்தால் மகிழ்வாள், இதை வெறுப்பாள் என புரிந்துகொண்டு (பயந்து கொண்டல்ல) நடந்தால் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.. நமக்காத்தான் நம் மனைவி, அவளுக்காகத்தான் நான் என்பதை முதலில் சரியாக புரிந்ததுக் கொள்ள வேண்டும்.

அன்பு காட்டுதல்...
        அன்பு என்றால் சின்ன சின்ன விஷயங்களில் காட்டும் அன்பு கூட வாழ்க்கை பந்தத்தில் பெரிய அளவில் பலன் கொடுக்கும். கணவன் வேலைக்கு போய் வருகிறான் என்றால், அவனிடம் நான்கு வார்த்தைகள் ஆறுதலாக பேசக்கூட நிறைய மனைவிமார்கள் தயாராக இல்லை. வெளியே இருந்து வந்த ஆணிடம் கொஞ்சம் நன்றாக பேசி ஒரு வாய் காபி கொடுப்போம் என்பது நிறைய வீடுகளில் நடப்பதில்லை (மாதத்திற்கு ஒரு முறை சம்பள தேதியில் பரவலாக இது கிடைக்கலாம் அதனால சம்பள தேதிய விட்டுடுங்க😉😉). 

பெரும்பாலும் வீட்டிலுள்ள பெண்களுக்கு தொலைக்காட்சிதான் பாதி., இல்லை இல்லை முழு குடும்பமும். இந்த... செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப்படும் கதைதான். தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில்தான் அவர்களுக்கு வீடு பற்றிய ஞாபகமே வருவதுண்டு. கொஞ்சம் தண்ணி கொடேன் என கணவன் கேட்டால், சும்ம இருங்க பாத்துட்டு இருக்கேன்ல போய் மொண்டு குடிங்க, இதுக்கு ஒரு ஆள் வேணுமா? பெரிய கலக்டர் உத்யோகம் பார்த்துட்டு வந்த மாதிரிதான் வேலை ஏவுறது (கலக்டர் வீட்டுல எப்படின்னு கலக்டருக்குத் தானே தெரியும் பாவம்) என்ற கடும் சொல் தடையில்லாமல் வந்து விழும்.

கணவன்மார்களும் இதற்கு சளைத்தவர்களில்லை மாப்பிள்ளை விடுப்பு தினங்களில் கூட தினத்தந்தியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கி இருப்பார் தன் மனைவி, கஷ்டப்பட்டு! வேலைகள் செய்கிறாளே கொஞ்சம் ஒத்தாசையா இருப்போம் என்ற மனநிலைமை ஐயாவிற்கு இருக்காது. இல்லையென்றால் வெளியே ஊர் சுற்றலாம் வாங்க அப்படின்னு கிளம்பி ஊர் சுற்றிவிட்டு சரியாக சாப்பாட்டுக்கு வந்துவிடுவார் (சில சமயங்களில் அதுவும் இல்லை)

இதற்கு மாறாக சின்ன சின்ன விஷயங்களில் அவர்களிடம் அன்பு காட்டிப்பாருங்கள், உனக்கு இந்த புடவை எத்தனை முறை கட்டினாலும் எடுப்பாதான் இருக்கு ஐஸ்வர்யா ராயெல்லாம் உன் அழகுக்கு முன்னாடி ஒன்னுமேயில்ல அப்படின்னு (பொய்தான்னு தெரியும், இருந்தாலும்) புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லிப்பாருங்கள், அதென்னமோ தெரியலைடி 5ஸ்டார் ஹோட்டலுக்கு போய் காபி குடிச்சா கூட உன் கையால போட்ட காபிதான் காபி சே சான்ஸே இல்ல 5ஸ்டார் காப்பிலாம் இது பக்கத்துல வரவே முடியாது சூப்பர் (ஓவர்தான் ஆனாலும் பரவாயில்ல) அப்படின்னு சொல்லித்தான் பாருங்களேன் (நீங்க கேட்காமலேயே கன்னத்தில் கிடைப்பது நிச்சயம் (அட பயப்படாதீங்க அடி இல்ல)). 

அது போல கணவன் அலுவலகம் போகும் போது வெளியே வந்து சின்னதாக புன்னகைத்து வழியனுப்பிப் பாருங்களேன் (சாயங்காலம் உங்களுக்கான மல்லிகைப்பூ ரிசர்வ்ட்டு). என்னங்க ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க ரொம்ப வேலையா? தலைவலிக்குதா? நா காபி போட்டு தரவா? என கொஞ்சம் ஆதரவு குரலில் கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் கஷ்டப்படாமலே உங்கள் அன்பிற்கு உங்கள் துணையை அடிமையாக்கி விடலாம்.

இப்படியான சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பாதையில் கூட்டிச்செல்லும், அதிலேயே நிரந்தரமாக இருக்கச் செய்யும்.

ஆகையினால் கணவன் மனைவிக்கிடையே அன்பு செலுத்தி நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய துணையுடைய வாழ்க்கையையும் சந்தோஷமாக வைத்திருப்போம்

இனி நம்முடைய வாழ்க்கை கசக்காது, திப்பாக இனிக்கும் என நம்புகிறேன் நான் இதை செயல் படுத்த தொடங்கிட்டேன், நீங்களும்தானே??.


குறிப்பு : 
இதை நான் எனது பழைய "கண்ணியம்" என்ற ப்ளாக்கில் 
February 15, 2011 அன்று எழுதிய கட்டுரையின் மீள் பதிவு

கருத்துகள் இல்லை