நெல்லையில் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த பாஜக மாவட்டத் தலைவர் கைது!
மாடுகளால் ஏற்படும் ஆபத்து காரணமாக அவற்றை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். அதனால் அவ்வப்போது மாடுகளைப் பிடித்து ராமையன்பட்டி பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கு பகுதிக்குக் கொண்டு செல்வதும் அங்கு சென்று மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை அவிழ்த்து வருவதும் வாடிக்கையாக இருந்தது.
ஆனாலும், மாடுகள் சாலைகளில் உலாவுவது நிற்கவில்லை. அதனால் சமூக ஆர்வலர்கள், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி சார்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், `மாடுகளை சாலையில் திரியவிடாமல் அதன் உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும். அல்லது அவற்றைப் பிடித்து ஏலம் விடப்படும்' என எச்சரிக்கை விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களாக சாலையில் சுற்றிய மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்துச் சென்று ஏலம் விட்டார்கள்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் சாலையில் சுற்றிய மாடுகளைப் பிடித்து ஏலம் விட்டனர். மாடுகளை ஏலம் எடுக்க வந்திருந்தவர்களும் மாடுகளின் உரிமையாளர்களும் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகளை ஏலம் விடும் மாநகராட்சியின் நடவடிக்கையை மாட்டின் உரிமையாளர்கள் எதிர்த்தனர். தன் மாடுகளை ஏலம் விடுவதை எதிர்த்து சூர்யா என்பவர் தீக்குளிக்க முயன்றார். அதனால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
சாலைகளில் இரவு பகலாகச் சுற்றித் திரியும் மாடுகளை ஏலம் விடும் மாநகராட்சியின் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பாராட்டிய போதிலும், இந்த விவகாரத்தை நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதித்தது. அதனால் ஏலம் விடுவதற்காக பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த மாவட்ட பா.ஜ.க தலைவர் தயாசங்கர் தலைமையிலான அந்தக் கட்சியினர், மாடுகளை அவிழ்த்து விட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களை பா.ஜ.க-வினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் நெல்லை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கைதானவர்களை நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கைதானவர்களை டிசம்பர் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை