Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

ரூ.6000/- வெள்ள நிவாரணம்.! - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு - முழு விவரம்.


சென்னை டிச.9 : தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு துன்பத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

இந்த அரசு நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார். 

மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், புயல் மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட  நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், 

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்,  மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், 

முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், 

முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை